பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று காளிதேவியிடம் வேண்டிக் கொண்டதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலை கோயிலில் சித்ரா பெளர்ணமி பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடந்த ஆன்மீக கருத்தரங்கில் விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய செயலாளர் ஸ்தாணுமாலையன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பின்னர், சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது முறையாக காளிமலை கோயிலுக்கு வருவதாகவும், முதல்முறை வந்தபோது தமக்குப் பல மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், இந்தியா வெல்ல வேண்டும் எனவும் காளிதேவியை வணங்கியதாகத் தெரிவித்தார்.