தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு, தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 15-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.