சீன தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இயக்குநர் ஜெனரல்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக முப்படைகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் டெல்லியில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய, ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய், கடந்த சில ஆண்டுகளாகவே அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
நமது விமான நிலையங்கள் மற்றும் தளவாடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது கடினமானது எனத் தெரிவித்த அவர், ஆஷிஷ் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்த புகழ்பெற்ற சொற்றொடரை மேற்கோள் காட்டி இந்தியாவிடம் பாகிஸ்தான் பெற்ற தோல்வியை விளக்கினார். மேலும், விராட் கோலி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் எனவும் ராஜீவ் காய் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய, நீண்ட தூர ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாகத் தகர்த்து அழித்ததாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் நமது அணுகுமுறை வேறு விதமாக இருக்கும் எனக் கூறிய அவர், தீவிரவாதத்தை ஒழிக்க நாம் முன்னேற வேண்டியது அவசியானது எனத் தெரிவித்தார்.