ஆக்ரோஷமான ஆளுமை, அசத்தலான பேட்டிங் திறமை, கொந்தளிக்கும் சேசிங் என நெருப்புக் குழம்பாக வலம் வந்த விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் தி கோட் என அழைக்கப்படும் விரோட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் உலகை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
THE GOAT என்ற பட்டத்தை சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் சொந்தமாக்கிக்கொண்ட வீரர் என்றால் அது விராட் கோலி மட்டுமே! ரசிகர்களால் கிங் கோலி என்றும், நட்பு வட்டாரங்களில் சிக்கு என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிவிக்கப்படாத மன்னராகவே வலம் வந்திருக்கிறார்.
சமீபத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், விராட் கோலியும் ஓய்வு அறிவிக்க உள்ளார் என தகவல்கள் பரவியது. அதற்கேற்ப தன்னுடைய ஓய்வு விருப்பத்தையும் பிசிசிஐ இடம் தெரிவித்திருந்தார் விராட் கோலி. இருப்பினும் விராட் கோலியின் ஓய்வு கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ, அவரை ஓய்வு முடிவை திரும்பப் பெற கோரி பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியது.
தன்னுடைய முடிவில் பின்வாங்காத விரோட் கோலி, தான் மிகவும் நேசித்த டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் உலகத்திற்குள் கால் தடம் பதித்த விராட் கோலி அடுத்த பதினான்கு ஆண்டுகள் தன் தனித்துவமிக்க திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். விரோட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மைதானத்திற்குள் நெருப்பை கக்கிய வரலாறுகள் எந்நாளும் நினைவு கூறப்படும்
36 வயதாகும் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய போது அவருக்கு வயது 22 மட்டுமே. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடிய கோலி 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு அறிவித்திருக்கும் நிலையில், அவரின் நான்கு முக்கியமான பரிமாணங்கள் மிக மிக முக்கியமானது. நிலைத்து நின்று ஆடும் திறன், கோபத்தின் வெளிப்பாடு, இக்கட்டான நிலையிலும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் திறமை மற்றும் அவர் அடித்த இரட்டைச் சதங்கள் இவைகள் அனைத்தும் தான் விராட் கோலியின் அடையாளங்கள்.
2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்கள் மண்ணான ஆன்டிகுவாவில் கோலியின் முதல் இரட்டை சதம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டணில் இங்கிலாந்து பவுளர்களுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் அற்புதமானது. குறிப்பாக அந்த போட்டியில் 149 ரன்கள் விளாசிய கோலி, இங்கிலாந்து அணிக்கே பயம் காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுபோல ஏராளமான சம்பவங்களை செய்திருக்கும் விராட் கோலியின் 2016 முதல் 2018 க்கு இடைப்பட்ட காலத்தில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 55.10 ஆக இருந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தான் விராட் கோலி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக பெரிய சதங்களையும், இரட்டை சதங்களையும் விளாசியுள்ளார் கோலி.
2019 ஆம் ஆண்டு புனேவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர் அடித்த 254* நாட் அவுட், கோலியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸாக கருதப்படுகிறது. தனது agressive ஆன சேசிங் ஸ்டைலில் நிலைத்து ஆடிய கோலி, துல்லியமாக ஷாட்களை ஆடி 254 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் போட்டியை முடித்துக் கொடுத்தார்.
சிறந்த இந்திய கேப்டன்களில் ஒருவரான விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்திருக்கிறார், அவற்றில் 40 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ள கோலியின் வெற்றி சதவிகிதம் என்பது 58.8% ஆகும். இது முன்னாள் இந்தியா கேப்டன் MS தோனியின் 45% விட, கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் 2018-2019 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களையே வீழ்த்திய வரலாறு கோலியின் தலைமையில் என்பதை யாராலும் மறந்து விட முடியாது. ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணியை முதல் இடத்தில் பல காலம் தக்க வைத்த பெருமை கோலியை சேரும்.
இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் எனும் தனி பெருமை கொண்ட விராட் கோலி தலைமையில் தான், 2016 முதல் 17 வரை 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. இவை அனைத்தும் இந்தியா மற்றும் வெளிநாடு ஆடுகளங்களில் மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகள் ஆகும்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9230 ரன்கள் அடித்துள்ள கோலி, இதுவரை 7 இரட்டை சதங்கள் விளாசி இருக்கிறார். 2014 முதல் 2019 வரை மொத்தமாக 63.65 ஆவரேஜில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே இரண்டு கெலண்டர் வருடங்களில் 1000 ரன்களை 75 ஆவரேஜுடன் அடித்த ஒரே வீரர் என்ற கிரீடமும் கோலியை சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆட்ட நாயகன் மற்றும் 3 தொடர் நாயகன் விருதுகளை பெற்று இருக்கிறார் இந்த மார்வல் கோலி.
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார் என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சச்சினை போல ஒருவர் உருவாக முடியாது என சொன்னவர்கள் எல்லாம், தற்போது கோலியை போல ஒருவர் உருவாக முடியாது என்று மார் தட்டிக் கொள்ளும் பெருமைக்கு சொந்தக்காரர் தான் இந்த கிங் கோலி.
இனி கோலியின் வரலாறு, வருங்கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்மாதிரியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரது ஆயுதமான வாள் போன்ற அவரது பேட், கிரிக்கெட் எனும் களத்தில், சீவிய தலைகள் எனும் பந்துகளும், அதன் இரத்த ஆறுகளான ரன்களும், காலத்தால் அழியாத சுவடுகளாக உருவெடுக்கும்.