பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் எல்லைப்பகுதியிலேயே வழிமறித்துத் தாக்கி அழித்த ஆகாஷ் ஏவுகணை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் சிறப்பம்சங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் ஆகாஷ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் அதிநவீன அதிநவீன வசதிகள் கொண்ட ஏவுகணைகள் ஆகும்.
இந்தியப் பாதுகாப்புத்துறையின் முப்படைகளிலும் ஆகாஷ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது. 5.8 மீட்டர் நீளமுடைய ஆகாஷ் ஏவுகணையின் ஒட்டுமொத்த எடை 710 கிலோ கிராம் ஆகும்.
ஆகாஷ் ஏவுகணை மணிக்கு 4,200 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை உடையது. 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் எதிரி நாட்டின் இலக்கை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது.
ஆகாஷ் ஏவுகணைகள் அனைத்து விதமான வெப்பநிலைகளிலும் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் சக்தி படைத்தது ஆகும். எதிரிநாட்டின் ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமல்லாது போர் விமானங்களையும் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தது.
ஒரே நேரத்தில் எதிரிநாட்டின் பல இலக்குகளைக் குறிவைத்து அழிக்கும் சக்தி படைத்த ஆகாஷ் ஏவுகணைகளால் பாகிஸ்தானின் ட்ரோன்கள் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன.
ஆகாஷ் ஏவுகணை முழுக்க முழுக்க தானியங்கியாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆகாஷ் ஏவுகணையை எளிமையாக எடுத்துச் செல்ல முடியும்.
குறைவான விலையில் அதிகளவு பலனுள்ள ஆகாஷ் ஏவுகணையை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.