பேராசிரியர் வருகைப்பதிவில் குறைபாடு உள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நிகழாண்டு தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை தேசிய மருத்துவ ஆணைய குழு மேற்கொண்டது.
அப்போது சென்னை, கோவை மருத்துவ கல்லூரிகளை தவிர்த்து மற்ற அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் வருகைப் பதிவு குறைவு உள்பட பல்வேறு குறைபாடுகளை தேசிய மருத்துவ ஆணையக்குழு கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறைபாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக பேசிய மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பேராசிரியர்கள் பணியிட மாற்றம், தொடர் விடுப்பு காரணமாக வருகை பதிவு குறைந்துள்ளதாகவும் இதற்கான உரிய விளக்கத்தை அளித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.