தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, பேராசிரியர் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிததுள்ளார். .
அதிலும், 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதும், மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு, வரும் வாரத்தில், காலக்கெடு நிறைவடைய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உரிய விளக்கம் அளிக்காததாலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும், இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. இதனால், மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதமும், இதே காரணங்களுக்காக, புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், திமுக அரசு தனது தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை. தற்போது 34 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு, அடியோடு சிதைந்து போய் விடும். ஆனால், தினமும் வீண் விளம்பர நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இது குறித்து எந்தக் கவலையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் குடும்பத்தினருக்கு யார் சிறந்த பணியாளாக இருப்பது என்ற மற்ற அமைச்சர்களுடனான போட்டியில், முதல் வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார். உங்கள் விளம்பர ஆசைக்கு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவைப் பறிகொடுக்க முடியாது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக, உடனடியாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.