பாலக்காடு விரைவு ரயிலில் பெண் பயணி காயமடைந்ததற்குப் படுக்கைக்கான கொக்கியைச் சரியாக கையாளாததே காரணம் எனச் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயிலின் எஸ்- 5 என்ற பெட்டியில் பெண் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது நடுப்படுக்கை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெண் பயணிக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக மொரப்பூர் ரயில்வே நிறுத்தத்தில் அவரை அதிகாரிகள் இறங்குமாறு கூறினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், படுக்கையின் இணைப்பைச் சரியாகக் கையாளாததே விபத்திற்குக் காரணம் எனவும் இணைப்பு கொக்கி நல்ல வலுவுடன் இருப்பதாகவும் பயணிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.