பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, பொள்ளாச்சியைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததோடு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.
வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதிகபட்சமாக 2வது குற்றவாளி திருநாவுக்கரசர் மற்றும் 5வது குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 3வது குற்றவாளி சதீஷ் மற்றும் 7வது குற்றவாளி ஹெரன்பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பிற குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கியும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாகத் தண்டனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.