கோவை அருகே கோவில்பாளையம் பகுதியில் நாட்டு துப்பாக்கியை வைத்து போலீசாரை சுட்ட ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஹரிஸ்ரீ என்பவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி மேலே சுட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஹரிஸ்ரீயிடம் போலீசார் விசாரணை செய்ய சென்றனர்.
அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஹரிஸ்ரீ தனது துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீ மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.