கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 9 வது வார்டிற்கு உட்பட்ட பாரதியார் நகரில் மேய்ச்சல் புறம்போக்கு என்னும் அரசுக்கு சொந்தமான 8.60 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும், நகர்ப்புற அரசு ஆரம்பச் சுகாதார நிலையமும் செயல்பட்டு வருவதுடன் சலவை தொழிலாளர்கள் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு அனைவரும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில்150 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், சந்திரசேகர், விஜயகுமார் உள்ளிட்ட 15 பேர் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.