பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படும் நோக்கில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் மக்களின் பாஸ்போர்ட் தரவுகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் இ பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட்டில் RFID சிப், அதாவது ரேடியோ அதிர்வெண் அடையாளம் மற்றும் ஒரு மினி ஆண்டெனா உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இருக்கும் Public Key Infrastructure மூலம் போலி பாஸ்போர்ட் உருவாக்கவே முடியாத அளவுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் தங்க நிறத்தில் சின்னம் இடம்பெற்ற இந்த பாஸ்போர்ட்டின் உள்பக்கத்தில் சிம்கார்டு போன்ற ஒரு சிறிய சிப் பொருத்தப்பட்டு, பயோமெட்ரிக் விவரங்கள் பதிவேற்றப்பட்டிருக்கும்.
இந்தவகை பாஸ்போர்ட் அனைவருக்கும் கட்டாயமல்ல எனவும், சென்னை உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ பாஸ்போர்ட் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வகையான பாஸ்போர்ட்டை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.