உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
கண்காட்சியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் அரண்மனை, கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, சதுரங்கம், யானை உட்பட பல்வேறு வடிவங்கள் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.
மேலும், குழந்தைகளைக் கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த ஆண்டு 11 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதனிடையே, உதகையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பெய்த மழையால், மலர்க் கண்காட்சியைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் சற்றே அவதிக்கு உள்ளாகினர். இருந்த போதிலும் திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளுகுளு சூழல் நிலவியதால், அதனை அனுபவித்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.