பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகப் பயங்கரவாதமும் பாகிஸ்தானும் பின்னிப் பிணைந்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதியின் மகன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதியாக அடிப்படைவாத இஸ்லாமிய மதகுருவின் மகனாக அசிம் முனீர் உள்ளார். இருநாட்டுக் கொள்கைகளும் வெவ்வேறானது என்றும், காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்றும் மத பிரிவினையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.
அசிம் முனீர் பேசிய 7 நாட்களுக்குள், பஹல்காம் பயங்கர வாத தாக்குதல் நடந்தது. பைசாரன் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலாவுக்கு வந்த ஒரு நேபாளி உட்பட 26 பேரை இந்து என்று உறுதி செய்தபின் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பயங்கரவாதிகள் என்ற விஷமுடைய அம்புகளை எய்தது பாகிஸ்தான் என்று ஆதாரத்துடன் கண்டறிந்த இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, பொய் பிரச்சாரத்தைப் பாகிஸ்தான் ஊடகங்கள் மூலமாக நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக உள்ள இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களைப் தெரிவித்து வருகிறார்.
இந்தியா மீதான பாகிஸ்தானின் ராணுவத் தாக்குதல்களுக்குக் குரானிலிருந்து பெயர் வைக்கப் பட்டது குறித்துப் பேசிய அகமது ஷெரிப் சவுத்ரி, பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பயிற்சி மற்றும் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாம் மதத்தின் அடிப்படையிலேயே அமைத்துள்ளது என்று கூறினார்.
‘இமான், தக்வா, ஜிஹாத் ஃபி சபிலில்லாஹ்’ என்ற இஸ்லாமிய மத குறிக்கோளின் கீழ் நீண்ட காலமாகவே பாகிஸ்தான் இராணுவம் செயல்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான் இரும்புச் சுவர் என்ற பொருள்படும் வகையில் ‘புன்யானம் மர்சூஸ்’ என்று பெயர் வைத்திருந்தது.
இந்தப் பெயருக்குப் பின்னால் உள்ள குறியீட்டு அர்த்தத்தை, அல்லாவுக்காகப் போராடுபவர்கள், இஸ்லாத்துக்கு “இரும்புச் சுவர்” போன்றவர்கள் என்று விளக்கம் அளித்திருந்தார் அகமது ஷெரிப் சவுத்ரி. இந்நிலையில், ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரியின் தந்தை சுல்தான் பஷிருதீன் மஹ்மூத் ஒரு சர்வதேச பயங்கரவாதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அணு விஞ்ஞானியான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி கற்ற மஹ்மூத்துக்கு, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் மிக உயரிய விருதான சித்தாரா-இ-இம்தியாஸ் விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த மஹ்மூத், யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளை நிர்மாணிப்பதற்கும், யுரேனியத்திலிருந்து புளூட்டோனியம் சார்ந்த ஆயுதத் திறனுக்கு பாகிஸ்தான் மாறுவதற்குத் தேவையான உலைகளை வடிவமைப்பதற்கும் பெரும்பங்கு வகித்தார்.
அப்துல் கதீர் கான் நெதர்லாந்தில் இருந்து திருடிய வரைபடங்களின் அடிப்படையில், யுரேனியத்தை வளப்படுத்தவும், எரிவாயு மையவிலக்கு தொழில்நுட்பத்தை உருவாக்கவும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு மஹ்மூத் தலைமை தாங்கினார். பின்னர், மஹ்மூத் புளூட்டோனியம் குண்டை உருவாக்குவதற்காகப் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது.
சுல்தான் பஷிருதீன் மஹ்மூத் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குக் காரணமான அல்கொய்தா ஓசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
அணு விஞ்ஞானியானசுல்தான் பஷிருதீன் மஹ்மூத் அணு ஆயுத தொழில்நுட்பத்தை அல்-காய்தா அமைப்புக்கு வழங்க முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் அல்-கொய்தா, தலிபான் இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், நிதி திரட்டிய சுல்தான் பஷிருதீனின் பெயர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது.
மஹ்மூத் “உம்மா தமீர்-இ-நௌ” (UTN) என்ற அமைப்பை நிறுவியதாகவும், அதன் மூலம் ஒசாமா பின்லேடன் மற்றும் தலிபானுக்கு இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்களையும் நிதிகளையும் வழங்கியதாக ஐநா அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானுக்குச் சென்று ஒசாமா பின்லேடன்உள்ளிட்ட அல்-கொய்தா தலைவர்களைச் சந்தித்து அணு ஆயுதங்கள் குறித்து விவாதித்ததாகவும், 2001ம் ஆண்டு அப்போதைய தலிபான் தலைவர் முல்லா ஒமரையும் மஹ்மூத் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அழுத்தத்தால் மஹ்மூத்துவைக் கைது செய்த பாகிஸ்தான், மஹ்மூத்துக்குத் தனியாக அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப அறிவு இல்லை என்று கூறி விடுதலை செய்தது. இந்த உலகளாவிய பயங்கரவாதியின் மகனான அகமது ஷெரிப் சவுத்ரி பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளராக இருந்து கொண்டு, உலக அரங்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகப் பாகிஸ்தானைச் சித்திரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அல்-கொய்தாவுக்கு அணுக்குண்டைப் பரிசாக அளித்து, உலகையே அழிக்க விரும்பிய ஒரு பயங்கரவாதியின் மகன்தான் பாகிஸ்தானின் இராணுவச் செய்தி தொடர்பாளர் என்பதில் இருந்தே பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதம் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவேண்டும்.