டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனடிப்படையில், சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே. அலுவலகம், ராயப்பேட்டையில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள விக்ரம் ஆகாஷ் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.