திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் வகையில் வெளியான DD NEXT LEVEL திரைப்படத்தின் சர்ச்சை பாடலை, யூ-டியூபில் யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி முற்றிலுமாக நீக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சந்தானம் நடிப்பில் உருவான DD NEXT LEVEL திரைப்படத்தில் வரும் ‘கிஸ்ஸா 47’ என்ற பாடல், திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் படியாக உள்ள அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி சர்ச்சை பாடலை படத்தில் இருந்து நீக்குவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்ச்சை பாடல் யூ-டியூபில் டிரெண்டாகி வருவதாகவும், அந்த பாடலை யூ-டியூபில் யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.