கோடைக் காலம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தினால், பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் பேருந்து நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய நீலகிரி மாவட்டம் உதகை உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் விரும்பக் கூடிய சுற்றுலாத்தலமாகத் திகழ்ந்து வருகிறது.
அதோடு கோடைக்கால மலர்க்கண்காட்சியும் தொடங்கியிருப்பதால் உதகையை நோக்கி வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் உதகைக்குச் செல்லும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில், போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மிகுந்த அதிருப்தியடைச் செய்துள்ளது.
சுற்றுலாவுக்கு வருவோர் ஒருபுறம் இருக்கச் சொந்த காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காகச் செல்லும் பொதுமக்களும், குறைந்த அளவில் இயக்கப்படும் பேருந்துகளில் படியில் நின்று கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்
உதகை மலர்க் கண்காட்சியைக் கணக்கில் கொண்டு அடுத்தடுத்து வரும் நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்துத்துறை போதுமான பேருந்துகளை இயக்கி அவர்களின் பயணத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.