திருவண்ணாமலையில் திருமணம் தாண்டிய உறவிலிருந்த பெண் மீது அவரது ஆண் நண்பர் வீசிய பெட்ரோல் குண்டு, தவறுதலாக அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது விழுந்ததில் குழந்தைக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்ன பாப்பா என்ற பெண்ணுக்கும் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
நாளடைவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜாவைப் பிரிந்த சின்ன பாப்பா, தனது மகள் வீட்டிற்குச் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா வீட்டின் முன் அமர்ந்திருந்த சின்ன பாப்பா மீது பெட்ரோல் குண்டை எறிந்துள்ளார்.
ஆனால் அந்த குண்டு தவறுதலாக அங்கே விளையாடிக்கொண்டிருந்த சின்ன பாப்பாவின் 3 வயது பேத்தி மீது விழுந்து வெடித்தது.
இதில் குழந்தைக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.