8 மணி நேரச் சோதனைக்குப் பிறகு, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனடிப்படையில், சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர்.
அதேபோல், ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் அன்பில் மகேஸின் உறவினரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் வீட்டிற்கு அருகே கிடந்த 20க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட WHATSAPP CHAT நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். விசாகனின் மகனிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.