தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பம் என நினைத்து தேசியக் கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரியகுளத்தில் பள்ளி மற்றும் நூலக வாயிலில் தேசியக் கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் காங்கிரஸ் கட்சியின் வர்ணம் பூசியிருந்ததால் கொடிக் கம்பத்தை ஊழியர்கள் அகற்றியதாகப் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மீண்டும் அதே இடத்தில் கொடிக் கம்பத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சிக் கொடிக் கம்பத்திற்கும், தேசியக் கொடிக் கம்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத நகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.