கரூர் அருகே ஆம்னி பேருந்து, டிராக்டர் மற்றும் சுற்றுலா வேன் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கரூர்-சேலம் தேசிய நெருஞ்சாலை வழியாகப் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
வெண்ணைமலை அருகே சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் தடுப்பை தாண்டி மறுபுறம் சென்று, எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் சுற்றுலா வேனில் பயணம் செய்த 8 வயது சிறுமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்னி பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.