விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தந்தையும், மகனும் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள மண்டப சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சிலுக்குப்பட்டியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் கவின் குமார் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார். அதேபோல, தந்தை செந்தில் குமாரும் தனித் தேர்வராகப் பங்கேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தார்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கவின் குமார் 358 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், அவரது தந்தை செந்தில் குமார் 210 மதிப்பெண்கள் எடுத்தும் தேர்ச்சி பெற்றனர்.
ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தந்தையும், மகனும் தேர்ச்சி பெற்றுள்ள நிகழ்வு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.