மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்தடையால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரியும், 13 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பது குறித்துப் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனத் தடை விதித்து விசாரணையை ஜூன் 2-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.