கோடைக்காலமாக இருந்தாலும் சரி குளிர் காலமாக இருந்தாலும் சரி பிரதமர் சூரிய வீடு திட்டத்தின் கீழ் சோலார் பேனலை அமைத்துவிட்டால் கரண்ட் பில்லை கட்ட வேண்டிய அவசியமில்லை. மானியம், வங்கி கடன் வசதி என எண்ணற்ற சலுகைகளை உள்ளடக்கிய சோலார் பேனல் திட்டம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரி சக்தி திறனான சுமார் 2 லட்சம் மெகாவாட்டில் சூரிய மின்சக்தி பெரும்பங்கு வகிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் நாட்டின் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறனை வரும் 2030க்குள் 5 லட்சமாக உயர்த்தவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகப் பிரதமரின் சூர்யோதய திட்டத்தின் மூலம் ஒரு கோடி பயனாளிகள் பயன்பெறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சூரிய மின்சக்தி என்றால் என்ன ? அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மின்வாரியம் உட்பட யாரையும் சார்ந்திருக்காமல் தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தானே உற்பத்தி செய்து கொள்வது என்பது ஒருவித சுதந்திரமான உணர்வைத் தரும் வகையில் அமைந்திருக்கிறது. சோலார் பேனலை அமைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்ட பிறகு அதனை எப்படி அமைக்க வேண்டும் ? எங்கு அமைக்க வேண்டும் என்ற சந்தேகங்களையும் நாம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சோலார் பேனல் என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சிறு வீடுகளுக்கும் பொருத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அவ்வாறு பொருத்தக் கூடிய சோலார் பேனல்களுக்கு மானியம் தருவதோடு, வங்கிக் கடன்களுக்கும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.
இரண்டு லட்ச ரூபாய் வரையிலான சோலார் பேனல் அமைக்க வங்கிகளில் பெறும் கடன்களுக்கு எந்தவித உத்தரவாதமும் தரத் தேவையில்லை என்றால் யாராவது நம்ப முடிகிறதா ? அது மட்டுமல்ல மாதம் தோறும் இ.எம்.ஐ மூலமாகவும் கடனை செலுத்தும் வசதியும் இத்திட்டத்தில் இருக்கிறது.
ட்ரான்ஸ் கார்டு – பிரதமரின் சூரிய வீடு திட்டத்தின் கீழ் மிகக்குறைந்த அளவு வட்டியுடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ வாட் வரை 30 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட் வரை 60 ஆயிரம் ரூபாயும், 3 கிலோ வாட்டிற்கு 78 ஆயிரம் ரூபாயும் மானியமாகக் கிடைக்கும். லட்சம் வரையிலான கடனுக்கு நுகர்வோர் எந்தவித உத்தரவாதமும் வழங்கத் தேவையில்லை.
பொதுமக்கள் தங்களின் கடனை மாதத் தவணையாக 1130 ரூபாய் செலுத்தும் வசதியும் உள்ளது. இது பொதுமக்கள் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தை விடக் குறைவானது ஆகும்.
அதிகளவிலான மானியம், வங்கிகளில் உத்தரவாதமின்றி கடன் பெறும் வசதி எனப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். அது பிரதமரின் சூர்யோதயா திட்டத்தின் மூலம் நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் பயனடைவது தான்.