சென்னை அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் தமிழக அரசு, அவர்களுக்கான மாற்று வீடுகளைச் சென்னையின் புறநகர் பகுதியில் கட்டிக் கொடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சென்னையின் பிரதான நீர் வழித்தடமாக இருக்கும் அடையாற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அனகாபுத்தூர், சாந்தி காலனி, சைதாப்பேட்டை, மல்லிப்பூ நகர், அன்னை சத்யா நகர் என பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இப்பணிகளால் ஆண்டாண்டு காலமாக ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அவ்வாறு வெளியேற்றப்படும் மக்களுக்கு மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வீடுகள் பெரும்பாக்கம், பெருங்குளத்தூர் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒதுக்கப்படுவதால் அங்குச் செல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாகவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தின் போது வாக்குகள் கேட்க வரும் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் முடிந்த பின்பு தங்களை மறந்து விடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆற்றங்கரையோர மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாக இருந்தாலும், தங்களை வெளியேற்றிவிட்டு தனியாருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அனுமதி வழங்க அரசு முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடையாறு ஆற்றின் இருபுறங்களிலும் ஆபத்தான நிலைகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திலேயே மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.