ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தொடங்கிய பேரணியில்.
மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்டச் செயலாளர் தீபன் முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விருதுநகரில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி.பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியின் நிறைவில், உயிர்நீத்த வீரர்களின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றியை கொண்டாடும் வகையில் தேச பக்தர் குழு மற்றும் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதனை, ஏபிஜே அப்துல் கலாமின் பேரன் சலீம் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவித்தும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக-வினர் மூவர்ணக் கொடி பேரணி நடத்தினர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.சம்பத், கலிவரதன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
100 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்திய ராணுவத்தின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் போற்றியும் பேரணியானது நடைபெற்றது.