தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாக உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரதிநிதி டாக்டா் ரோடரிக்கோ ஆப்ரினுக்கு, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழகத்தில் பேறு கால இறப்பு குறைப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு குறைப்பு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில், அரசு மருத்துவர்கள் திறம்படச் செயலாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படாததால் மக்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டிலேயே தமிழக அரசு மருத்துவர்களுக்குத்தான் குறைவான ஊதியம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்கவும், மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும் அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.