உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வெவ்வேறு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், ஓய்வூதியம் தொடர்பான விவகாரத்தில் சட்டப்பிரிவு 220ஐ முழுமையாக ஆராய்ந்து, நீதித்துறையினருக்கு ஊதியத்துடன் இறுதி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றும்,
புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தபின், நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பாகுபாடு உள்ளது எனவும் தெரிவித்தனர்.
ஓய்வுக்குப் பிறகு வழங்கப்படும் இறுதி பலன்களில் நீதிபதிகளிடையே எந்தவொரு பாகுபாடும் காட்டுவது என்பது சட்டப்பிரிவு 14ஐ மீறும் செயல் என்றும் தெரிவித்தனர்.
கூடுதல் நீதிபதிகளாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்றும், குறிப்பாக நீதிபதிகளுக்கும், கூடுதல் நீதிபதிகளுக்கும் இருக்கும் வேறுபாடுகள் நிலைமையை மோசமாக்கிவிடும் எனவும் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிகளுக்கு 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.