சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இமயமலையில் உருவாகும் சிந்து நதியின் கிளை நதிகளாக ஐந்து நதிகள் உள்ளன. இந்த ஐந்து நதிகளின் தொகுப்பு சிந்து நதி எனப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உருவாகும் பியாஸ், ரவி, சட்லெஜ், செனாப், ஜீலம் மற்றும் சிந்து ஆகிய ஆறு நதிகளும் பாகிஸ்தான் வழியாகப் பாய்ந்து கராச்சி அருகே அரபிக் கடலைச் சென்று அடைகின்றன.
சுதந்திரத்தின் போது, இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இந்த நதிகளின் நீரைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பிரச்சனையை எழுப்பியது. இந்நிலையில், 1960ம் ஆண்டு, இருநாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் உலக வங்கியின் முன்னிலையில் கையெழுத்தானது.அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான், உலக வங்கி சார்பில் இலிப் ஆகியோர் கையெழுத்திட்டனர்
அதன்படி, மூன்று கிழக்கு நதிகளான பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் இந்தியாவுக்கும், மூன்று மேற்கு நதிகளான செனாப், சிந்து மற்றும் ஜீலம் ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய நதிகளின் மொத்த நீரில் 30 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத தண்ணீர் பாகிஸ்தானுக்கு என்றும் ஒப்பந்தத்தில் உள்ளது.
அதன்படி, சிந்து நதியில் மொத்தமாக 21800 கோடி கன அடி நீர் வருகிறது. இதில், வெறும் 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்குக் கிடைக்கிறது. இப்படியான நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்,உலகின் வெற்றிகரமான நதி நீர் ஒப்பந்தமாகக் கூறப்படுகிறது.
சிந்து நதி நதிநீர் ஒப்பந்தத்தை அமல்படுத்த, சிந்து நதி ஆணையர்களை இரு நாடுகளும் நியமித்துள்ளன. கடைசியாக இந்த ஆணையர்களின் சந்திப்பு, 2022 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல், ஒப்பந்தத்தைத் திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியா, பாகிஸ்தானுக்கு 4 முறை கடிதம் எழுதியுள்ளது. எந்த கடிதத்துக்கும் திருப்திகரமான பதில் அனுப்பாமல் பாகிஸ்தான் போக்கு காட்டியுள்ளது.
ஏற்கெனவே, 1965,1971,மற்றும் 1999 ஆகிய மூன்று போர்கள் பாகிஸ்தானுடன் நடந்த போதும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தவில்லை. ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, முதல் முறையாக, சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தைக் காலவரையறை இன்றி இந்தியா நிறுத்தி வைத்தது.
பாகிஸ்தானின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்குச் சிந்து நதி தண்ணீரையே 70 சதவீதத்துக்கும் மேல் நம்பியுள்ளது. எனவே சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு அந்நாட்டுக்கு மிகப் பெரிய இடியாக அமைந்தது.
சிந்து நதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்றும், ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, போர் நடவடிக்கைக்குச் சமமானது என்றும் கூறிய பாகிஸ்தான் ஒருபடி மேலே சென்று, சிந்து நதியில் தண்ணீர் வரவேண்டும் அல்லது இந்தியர்களின் ரத்தம் பாயும் என்று கூறியது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் என்று இந்தியா தொடங்கிய ராணுவ நடவடிக்கையால், பாகிஸ்தான் ராணுவம் கடும் இழப்புகளைச் சந்தித்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதல்களைத் தாங்கமுடியாத பாகிஸ்தான், ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்று கூறிய பிரதமர் மோடி, தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாயாது என்று தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் இந்தியாவுக்கு உரிமையுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் திரும்பப் பெறுவது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஏற்கெனவே, இந்தியா-பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்த சர்ச்சையில் உலக வங்கிக்கு எந்த பங்கும், அதிகாரமும் இல்லை அதன் தலைவர் அஜய் பங்கா தெளிவுபடுத்தி இருந்தார். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீர்மின் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
செனாப் நதியில் மட்டும் இந்தியாவின் 70க்கும் மேற்பட்ட பெரிய நீர்மின் திட்டங்கள், திட்டமிடல், கட்டுமானம் மற்றும் செயல்பாடு என பல்வேறு கட்டங்களில் உள்ளன. குறிப்பாக, காஷ்மீரில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியான கிஷ்த்வாரில் மட்டும், (Bursar) பர்சார் அணை, (Pakal Dul) பகால் துல் அணை, (Kwar) குவார் அணை, (Kiru) கிரு அணை, ( Kirthai) கீர்த்தாய்-I அணை, ( Kirthai ) கீர்த்தாய் II அணை, ( Ratle ) ரேட்டில் அணை என இந்தியா ஏழு புதிய அணைகளைக் கட்டி வருகிறது. இதில் நான்கு அணைகளின் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நீர்மின் திட்டங்கள் நிறைவடைந்தால், ஜம்மு-காஷ்மீரில் 10,000 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூடுதலாக, பாசனம் மற்றும் குடிநீருக்கான தண்ணீர் வசதி கணிசமாக அளவுக்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்தநீர் தேவைக்குப் பாகிஸ்தான் சிந்துநதி நீரையே நம்பியுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்படுவதால் முதலில், குடிநீருக்கான தண்ணீர் பற்றக்குறையை பாகிஸ்தான் சந்திக்கும். போதிய நீர் கிடைக்காத நிலையில், நாட்டின் விவசாயம் பெருமளவில் பாதிப்படையும்.
விவசாயத்துறையில் பாதிப்பு ஏற்பட்டால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும். இறக்குமதியை நம்பவேண்டிய சூழல் உருவாகும். ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். இதனால், கடுமையான பஞ்சம் ஏற்பட்டு, மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும்.
இந்நிலையில், தண்ணீருக்காக, பாகிஸ்தான் இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவைக் கைவிடுமாறு அந்நாட்டு நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், பாகிஸ்தானில் பல நெருக்கடிகள் உருவாகி வருகிறது. எனவே, தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்றும் சிந்து நதி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.