திருப்பரங்குன்றம் அருகே மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே வளையன்குளம் கிராமத்தில் அம்மா பிள்ளை என்பவர் தனது பேரன் வீரமணி மற்றும் பக்கத்து வீட்டு பெண் வெங்கட்டி ஆகியோருடன் தனது வீட்டு வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது, மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக, அக்கம்பக்கத்தின் உதவியுடன் 108 ஆம்புலன்சில் 3 பேரும் வலையன்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, வெங்கட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் வீரமணி மற்றும் அம்மா பிள்ளை ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.