வடகாடு பிரச்னை தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் இருசமூகத்தினர் இடையேயான தகராறில் பட்டியலினத்தவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திலகர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பிரச்னையில் இரு சமூகத்தினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகவும், இந்த பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், வேங்கை வயல் பிரச்னை போன்று வடகாடு பிரச்னையையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்கூட்டியே திசை திருப்பி விட்டதாக தெரிவித்தார். மேலும், வடகாடு பிரச்னையை தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.