சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த துபாயை சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போரூரை சேர்ந்த மருத்துவரான ஜனனி என்பவர் வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக வெங்கடேசன் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததால், அவரை வீட்டை விட்டு காலி செய்ய உதவுமாறு துபாயில் உள்ள உறவினரை மருத்துவரின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
அப்போது, துபாயைச் சேர்ந்த வெங்கட் ஆச்சார்யா என்ற வழக்கறிஞரை உறவினர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். வழக்கறிஞர் சொன்னபடி ஜனனியும், அவரது தந்தை சிவகுமாரும் வெங்கடேசன் வீட்டில் வாடகையை கேட்க சென்றனர்.
இருதரப்பு இடையே நடைபெற்ற வாடகை தொடர்பான பேச்சுவார்த்தையை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது வெங்கடேசன் தனது 6 வயது மகளை மடியில் தூங்க வைத்திருந்த காட்சியும் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ பதிவுகளை வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவுக்குப் பெண் மருத்துவர் ஜனனி அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவோ
6 வயது மகளை வீடியோ எடுத்ததாக வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளதாகப் பொய் சொன்னதோடு அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கப் பணம் வேண்டும் எனவும் கூறி தனது கூட்டாளிகள் மூலம் 37 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார்.
தொடர்ந்து 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில் இதுகுறித்து மருத்துவர் ஜனனி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்த நிலையில் துபாயைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா உட்பட இருவரைத் தேடி வருகின்றனர்.