வெளிநாடுகளிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோத தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தும், தண்டனை காலம் முடிவடைந்ததும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இதன் விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுபாஷ்கரனுக்கு அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதால் அவரையும் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.
அதற்கு நீதிபதிகள், உலகளவிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல எனக் கருத்து தெரிவித்தனர். மேலும், இங்கே குடியேற என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால் வேறு நாடுகளை அணுகலாம் என அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.