திருச்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே டன் கணக்கில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கொடாப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு இறைச்சி கழிவுகளை டன் கணக்கில் சேமித்து வைத்து, அவற்றை உரமாகத் தயாரிக்கும் பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட டிரம்களில் சேமிக்கப்படும் இறைச்சி கழிவுகளால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவற்றைத் தொடர்ந்து சுவாசிப்பதால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இறைச்சி கழிவுகளைக் கொட்டும் இடத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.