சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை பகுதி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில், 4 பேரின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு வழக்கம்போல் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாறை சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த ஆண்டிச்சாமி, ஆறுமுகம், முருகானந்தம் மற்றும் கணேசனின் உடல்கள், பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக பிரேத பரிசோதனை அறை வயிலில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, பிரேத பரிசோதனை அறையின் வாயிலில் இருந்த மின்விளக்கு எரியாததால் இருளில் அஞ்சலி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக வேறொரு விளக்கை பொருத்தினர்.
இதனிடையே, கல்குவாரியில் பாறைகளுக்கிடையே சிக்கியிருக்கும் பொக்லைன் ஆப்ரேட்டரின் உடலை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். பொக்லைன் ஆப்ரேட்டர் ஆர்ஷித்தின் உடல் பாறைகளுக்கிடையே சிக்கிக் கொண்டதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியை தொடங்கினர்.