சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் 8 பேரில் Vlogger ஜோதி மல்கோத்ராவும் ஒருவர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துச் செல்லும் ஜோதி மல்கோத்ராவின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. யார் இந்த ஜோதி மல்கோத்ரா ? பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கர வாத தாக்குதலைத் தொடர்ந்து,பாகிஸ்தான் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. உடனேயே, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாயின. பாகிஸ்தான் ஆதரவு வீடியோக்களை வெளியிட்ட யூ ட்யூப் சேனல்களை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செயல்பட்ட Travel Vlogger ஜோதி மல்ஹோத்ராவின் WHATSAPP, SNAPSHOT உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளைக் கண்காணித்ததில், பாகிஸ்தானின் ISI உடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
ஜோதி மல்கோத்ராவின் மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்து சந்தேகத்துக்குரிய முக்கிய தகவல்கள் கைப்பற்றப் பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மேலும் பல பாகிஸ்தான் உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த 33 வயதான ஜோதி மல்கோத்ரா ஒரு பிரபல யூ டியூபர். TRAVEL WITH JO என்ற பெயரில் யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார். Travel Vlogger ஆன இவர்,பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அதனைக் காணொளிகளாகத் தனது யூ ட்யூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பாகிஸ்தான் சென்று வந்த காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சீனாவுக்குச் சென்றும் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக,டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகத்தின் இரவு விருந்தில் பங்கேற்ற ஜோதி மல்கோத்ரா அதனையும் காணொளியாகத் தனது சேனலில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவின் தொடக்கத்தில்,பாகிஸ்தான் தேசிய தினத்தில் நடந்த இஃப்தார் விருந்துக்கு வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
விருந்துக்கான அலங்காரங்களும் ஏற்பாடும் சூப்பர் என்று பாராட்டும் ஜோதி மல்கோத்ராவை, ரஹீம் என்பவர் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, ‘டிராவல் வித் ஜோ’ யூடியூப் சேனல் பற்றியும் குறிப்பிடுகிறார். ஜோதி மல்ஹோத்ராவை தனது மனைவிக்கு டேனிஷ் அறிமுகப்படுத்தி வைப்பதும், ரஹீமையும் அவரது மனைவியையும் ஜோதி மல்கோத்ரா ஹரியானாவின் ஹிசாரில் உள்ள தனது வீட்டிற்கு அழைப்பதும், வீடியோவில் உள்ளது.
இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்தியாவின் மற்ற பிரபலமான யூடியூப்பர்களைப் பார்த்து, பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு விருப்பமா என்று கேட்பதும், விசா எளிதில் கிடைக்கும் என்றும் கூறுகிறார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷ், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட காரணத்துக்காக மத்திய அரசால் நாடு கடத்தப் பட்டவராவார். இந்த டேனிஷுக்கும் ஜோதி மல்கோத்ராவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
டேனிஷின் உதவியுடன், 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற ஜோதி மல்கோத்ரா,பாகிஸ்தான் ISI அதிகாரிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் சில ISI அதிகாரிகளுடன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களையும் ஜோதி மல்கோத்ரா மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் காஷ்மீரின் பகல்காம் தாக்குதல் நடந்த பகுதிக்கு சுற்றுலா சென்றதும், அதற்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாகவும் பஹல்காமுக்குச் சென்று, பைசாரன் சுற்றுலாத் தலத்தைப் பற்றியும் சில வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.
லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் ஜோதி மல்ஹோத்ரா சென்றதும், சில சீன உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத்தலங்கள் மட்டும் இல்லாமல் ராணுவ பாதுகாப்பு தொடர்பான இடங்களுக்கும் சென்று தனது சேனலில் பகிரும் ஜோதி மல்கோத்ரா, அந்த இடங்கள் தொடர்பான ரகசியங்களைப் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த விருந்தில் ஏராளமான யூடியூபர்களை பங்கேற்க வைத்ததையும் ஜோதி மல்கோத்ரா விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.