தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாகக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்வரத்து ஆயிரத்து 410 கன அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் குவியல் குவியலாகச் செல்கின்றன. ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் மிதந்து செல்லும் ரசாயன நுரைகள், காற்றில் பறந்து சென்று விவசாய தோட்டங்கள் மற்றும் சாலைகளில் விழுகின்றன.
இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தட்டனப்பள்ளி, சின்ன கொள்ளு, பெத்த கொள்ளு, நந்திமங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவு நீர் செல்வதால் தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்றும், கால்நடைகளைக் குளிப்பாட்டக் கூடாது எனவும் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.