ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் கிடைத்த வெற்றியை, கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் ராகுல் காந்தி, தவறான புரிதலுடன், தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகுலின் இந்த செயல்பாடு, பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவருக்கு இணையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முன்பாகவே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு அதுபற்றிய தகவல்களை அம்பலப்படுத்தி விட்டார் என்பதுதான் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதற்கு அவர் சொல்லும் காரணம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் இடையிலான தகவல் தொடர்பில், பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் பற்றி விளக்கப்பட்டதால் பாகிஸ்தான் உஷாராகி இந்தியப் படைகளுக்குப் பதிலடி கொடுக்க தயாராகி விட்டது என்பதுதான். காங்கிரஸ் எம்.பி. ராகுலின் இந்த புரிதல் மிகத் தவறானது என்பது நடுநிலையான எந்த நபருக்கும் புரியும்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில நாட்களிலேயே அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு கூட்டம் நடத்தியது. அதில், மத்திய அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவிப்போம் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தன. அதன் பின்னர், முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாகப் பிரதமர் மோடியும் அறிவித்தார்.
இதன் எதிரொலியாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு ராணுவத்திற்கும் தெரிந்திருந்தது. நிலைமை இப்படி இருந்த போது, இந்திய ராணுவத்தின் தாக்குதலை அமைச்சர் ஜெய்சங்கர் முன்கூட்டியே பாகிஸ்தானுக்குத் தெரிவித்து விட்டார் என்று ராகுல் காந்தி கூறி வருவது சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாகப் பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை வான்வழித் தாக்குதல் மூலம் வெறும் 25 நிமிடங்களுக்குள் இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஜெனரலிடம் இந்திய ராணுவ ஜெனரலும், வெளியுறவு அமைச்சரும் அளித்த விளக்கத்தில், தீவிரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கியதாகவும், பாகிஸ்தான் ராணுவ தளங்கள் அல்லது அப்பாவி பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் விளக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தவறாகப் புரிந்து கொண்டே, இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாக ராகுல் பிதற்றிக் கொண்டே இருக்கிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி மத்திய அரசு பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்த ரஃபேல் விமானங்களின் தரத்தை விமர்சிக்கும் நோக்கில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எத்தனை போர் விமானங்களை இந்திய விமானப்படை பறி கொடுத்தது என்றும் ராகுல் கேட்டு வருகிறார்.
பிரான்ஸ் அரசிடமிருந்து, ரஃபேல் விமானங்களை வாங்கும் மத்திய அரசின் முயற்சியைத் தடுக்கும் நோக்கில், அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டார். எனினும், அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் விமானங்களை வாங்க அனுமதி அளித்தது.
இந்த சூழலில் தான் தற்போது ரஃபேல் விமானங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்திய ராணுவத்திற்குப் பலனளிக்கவில்லை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கவே, எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது என்றும் ராகுல் கேள்வி எழுப்பி வருவதாக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்த செயல்பாடுகள் பாகிஸ்தானைச் சேர்ந்த டிவி சேனல்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட பாகிஸ்தான் அரசை இந்த அளவிற்கு விமர்சித்தது இல்லை என்றும் கருதுகின்றனர். ஆனால், ராகுல் காந்தி, ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சரியான பதிலடி கொடுத்த மத்திய அரசை, எந்த வித தேசிய உணர்வும் இன்றி அரசியல் லாபத்திற்காக விமர்சித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் உள்ள ராகுல் காந்தி, மத்திய அரசிற்கு எதிர்ப்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, போதிய புரிதலோ, தரவுகளோ இல்லாமல் எதிரி நாட்டின் குடிமகன் போன்று செயல்படுவது அவரது உண்மையான மனநிலையை வெளிக்காட்டுவதாக பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறார்.