முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியோடு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை செலுத்தியபோது உத்தரவு கொடுக்கும் முன்னரே காவலர் ஒருவர் கவனக் குறைவால் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்த கோரத் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு DSP உட்பட 9 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர். இவ்வாறு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில்அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் கோரத் தாக்குதல் நடைபெற்று 34 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூண் அருகே காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மார்டீன் தலைமையில் அனைத்துக் காவல்நிலைய காவலர்களும் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
அப்போது உத்தரவு கொடுக்கும் முன்னரே காவலர் ஒருவர் கவனக் குறைவால் துப்பாக்கியால் சுட்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.