கொடுக்கப்பட்ட பணியில் சிறப்பாக பணியாற்றினால்தான், பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் பாகிஸ்தானில் விசித்திரமாக, தோல்விக்குக் காரணமான ஒருவருக்கு நாட்டின் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில், இஸ்லாமிய மதகுருவுக்குப் பிறந்த சையத் அசிம் முனீரின் முன்னோர்கள், முகமதுவின் நேரடி வாரிசுகள் என்று கூறப்படுகிறது. மதராசாவில் படிப்பை முடித்து அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் (OTS) பட்டம் பெற்ற அசிம் முனீர், 1986ம் ஆண்டு எல்லை படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு முதல், பாகிஸ்தானின் 11வது தலைமை ராணுவத் தளபதியான அசிம் முனீர், இந்த ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டியவர். சென்ற ஆண்டு, நவம்பரில் முப்படைத் தலைவர்களின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கும் சட்டத்தைப் பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
இந்த சட்டம் அசிம் முனீருக்காகவே கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. அதன்படி, அசிம் முனீர் 2027ஆம் ஆண்டில் தான் ஓய்வு பெறுகிறார். அசிம் முனீர், சர்ச்சைக்குரிய எரிச்சலூட்டும் மற்றும் அதிர்ச்சியூட்டும் மதவாத பேச்சுக்குப் பெயர் பெற்றவர். சமீபத்தில், ‘இரு நாடு கோட்பாடு’ என மத அடிப்படையில் பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசிய அசிம் முனீர், காஷ்மீரைப் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்றதோடு, காஷ்மீர் இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் உறுதியளித்திருந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குத் தூண்டுதலாக அசிம் முனீரின் இந்தப் பேச்சே காரணமான இருந்தது.
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் இராணுவ பதிலடிக்கு வழிவகுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி அவற்றை முற்றிலுமாக தரைமட்டமாக்கியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளைத் தாக்கியதைத் தன்னை தாக்கியதாக எண்ணிக்கொண்ட அசிம் முனீர், இந்தியாவின் ராணுவ நிலைகள் மீதும், முக்கிய நகரங்கள் மீதும் 3 நாட்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினார். பாகிஸ்தான் ஏவிய 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் PL 15E போன்ற ஏவுகணைகளை,இந்தியா வானிலேயே இடைமறித்துத் தாக்கி அழித்தது.
இதற்குப் பதிலடியாக, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் 12 முக்கிய விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டன. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ, அவசர அவசரமாகத் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சினார். பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை தற்காலிகமாக நிறுத்தியது.
இதற்கிடையில், பாகிஸ்தான் இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பொய் பிரச்சாரம் செய்தது. அதற்காக வீடியோ கேம்ஸ் காட்சிகளை எல்லாம் எடுத்துக்காட்டியது. உண்மையான செயற்கைக் கோள் படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு, பாகிஸ்தானின் தகவல்கள் அனைத்தும் போலியானவை மற்றும் தவறானவை என்றும் இந்தியா நிரூபித்தது.
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் போரில் தோற்று இன்னும் 10 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள், தோல்விக்குக் காரணமான தலைமை ராணுவத் தளபதி அசிம் முனீர், நாட்டின் ‘ஃபீல்ட் மார்ஷல்’ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு ராணுவ வெற்றிக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படும் . இந்தியாவுடனான போர் தோல்விக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஃபீல்ட் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் இரண்டாவது ஃபீல்ட் மார்ஷல் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 1958ம் ஆண்டு, ஆட்சியைக் கவிழ்த்து, பாகிஸ்தானின் முதல் இராணுவ ஆட்சியாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அயூப் கான், தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த முதலில் தன்னை ஃபீல்ட் மார்ஷலாக உயர்த்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசிம் முனீர் பாகிஸ்தான் அரசின் முடிவால்,ஃபீல்ட் மார்ஷல் ஆகியுள்ளார். அயூப் கான் ஃபீல்ட் மார்ஷலாக இருந்து ராணுவத்தை வழிநடத்தவில்லை. ஆனால், அசிம் முனீர் ஓய்வு பெறும் வரை பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷலாக இருப்பார். ராணுவத்துக்குக் கீழ்ப்படிந்து பாகிஸ்தான் அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையே அசிம் முனீரின் பதவி உயர்வு எடுத்துக்காட்டுகிறது.
அசிம் முனீர் ஃபீல்ட் மார்ஷலானது ஒரு மரியாதை அல்ல, எச்சரிக்கை. சொல்லப்போனால், வரலாற்றிலிருந்து பாகிஸ்தானின் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்து எதிர்ப்பு மற்றும் ஜிஹாத் இரண்டையும் வைத்துக்கொண்டு சொந்த தோல்விகளை மறைத்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் புதிய ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், நாட்டின் நேரடி கட்டுப்பாட்டைக் கையில் எடுப்பாரா ? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.