தமிழ்நாட்டைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவி தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சியமைத்த கட்சியினரும் ஆங்கிலேயர்களைப் போலவே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டதாக காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்தார்.
தனது அனுபவத்தில் தமிழ்நாட்டைப்போல வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகள், உபசாதிகள், கிளை சாதிகள் இருப்பதை இதுவரை பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
முன்னதாக கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.