நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மருந்து, மாத்திரைகளை வாங்க மணிக்கணக்கில் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களுக்கு 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின்பு மருந்து மாத்திரைகளை வாங்க வந்தபோது மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களில் சிலர், நெல்லை டவுன் கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்குச் சென்று விடுவதால் பற்றாக்குறை நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மருந்து மாத்திரைகளை உடனடியாக பெற்று செல்ல தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும் என வேண்டும் என நோளாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















