செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைக் கண்காணிக்கத் தவறியது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தவறியது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் நிர்வாகம் பதிலளிக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அத்துடன், விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கும் ஒத்திவைத்தது.