தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் 5 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், குற்றவாளியை மும்பை வரை தேடிச் சென்று கைது செய்த காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.
கர்நாடகாவைச் சேர்ந்த முரளிமோகன்ரெட்டி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாலிவாரம் கிராமத்தில் பண்ணை இல்லம் அமைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய காரில் எடுத்து வந்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டுநர் சேக் முகமது யூசூப் மாயமானார்.
இதுகுறித்து முரளிமோகன்ரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சேக் முகமது யூசூப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி, செல்போன் எண் மாற்றி, செல்வந்தர்களிடம் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் பணம் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து மும்பை வரை சென்று தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். கடைசியாக, மைசூரில் பதுங்கியிருந்த சேக் முகமது யூசூப்பை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு, 8 ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர்.