வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டை, டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு மூங்கிலால் செய்யப்பட்ட கூடையில் ஆர்க்கிட் பூங்கொத்தை, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வழங்கினார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்குதான் நமது நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்றும், வர்த்தகம் முதல் ஜவுளி வரை அனைத்து வளங்களும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கான மையமாக வடகிழக்கு விளங்குவதாகவும் அவர் கூறினார்.
ஒரு காலத்தில் வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி என்று மட்டுமே அழைக்கப்பட்டதாகக் கூறிய அவர், தற்போது வளர்ச்சியின் முன்னோடியாக வடகிழக்கு மாறி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் என்றும், அஷ்ட லட்சுமி எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.