அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்குக் கடந்த 15-ம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், “கோவையில் ஜூலை 30-ம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட உள்ளது” என்றும் “அதன் மூலம் உம்மை கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உயிர்தப்ப வேண்டுமென்றால் காளப்பட்டி- வெள்ளானைப்பட்டி சாலையில் உள்ள குப்பை மேட்டில் வரும் 25ம் தேதி ஒரு கோடி ரூபாய் பணத்தை வைக்க வேண்டுமெனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையாளரிடம் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை மிரட்டல் கடிதத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.