பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு இடையே எழுந்திருக்கும் அதிகாரப்பிரச்னை கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனை குறித்தும் பாமகவின் எதிர்காலம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சிறப்பாக எதிர்கொள்வதற்காக பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என்ற ராமதாஸின் அறிவிப்பில் தொடங்கிய பாமகவின் உட்கட்சி பிரச்சனை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் அவர் பதவியைப் பறிப்பதற்கான காரணம் என்ன என நிர்வாகிகள் சிலர் ராமதாஸிஸ்கு எதிராக எழுப்பிய கேள்வி உட்கட்சி பூசலை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
இதற்கிடையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பின் வன்னியர் சங்கம் நடத்திய வன்னிய இளைஞர்கள் சித்திரை முழுநிலவு மாநாட்டின் குழுத்தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில் பாமகவின் உட்கட்சி பூசல் முடிவடைந்துவிட்டதாக எண்ணிய நிர்வாகிகளுக்கு அந்த மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் குறித்தும் தொண்டர்கள் பற்றியும் ராமதாஸின் பேச்சு அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வன்னியர் சங்கம் நடத்திய முழுநிலவு மாநாட்டிற்குப் பின் அன்புமணியை மீண்டும் தலைவராக ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
அதோடு மாநாட்டில் ஜி.கே மணியைப் பற்றி பெருமையாகப் பேசிய ராமதாஸ், அன்புமணியின் உழைப்பைப் பாராட்டத் தவறிவிட்டதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடே ராமதாஸ் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 90 சதவிகிதம் பேர் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
ஏற்கனவே பாமக நடத்திய பொதுக்குழுவில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பு ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, நீலாங்கரையில் தனக்கென தனி அலுவலகம் திறந்திருப்பதாகவும், தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகள் அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம் எனவும் மேடையிலேயே பேசியிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அன்புமணி மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களும் திட்டமிட்டே புறக்கணித்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாமகவின் தலைவராகத் தன்னை அறிவிக்கும் வரை ராமதாஸ் நடத்தக் கூடிய கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்புமணிக்கு ஆதரவாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் இருப்பதையும் அடுத்தடுத்த கூட்டங்கள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தந்தை, மகனுக்கும் இடையேயான பிரச்சனை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற நேரத்தில் சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை என்று பேசுவதையும், நீச்சல் குளத்தில் நீச்சலடித்து தன் வீரத்தைக் காட்டுவது போன்ற காணொளிகளையும் வெளியிடுவதைத் தவிர்த்துவிட்டு கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அன்புமணியைத் தலைவராக அறிவிக்க முன்வர வேண்டும் என ராமதாஸுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்து வருகிறார்கள் பாமகவின் மூத்த நிர்வாகிகளும் அடிமட்டத் தொண்டர்களும்..!