ஒருபுறம் இறைச்சியின் கழிவுகள் மறுபுறம் மது அருந்துவோரின் தொல்லை என உதகை மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தின் சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் உதகைக்குத் தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருக்கிறது. அதிலும் கோடைக் காலம் தொடங்கியிருப்பதால் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அத்தகைய உதகையில் மக்கள் அதிகளவில் நடமாடும் நடைபாதைகளில் கொட்டிக் கிடக்கும் கோழி இறைச்சி கழிவுகள் பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகளவு கூடும் ஏடிசி பகுதியில் தற்காலிகமாக மார்க்கெட் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் அங்குச் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகள் சாலைகளிலேயே அதன் கழிவுகளைக் கொட்டுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.
இறைச்சிக் கழிவுகள் ஒருபுறம் சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் மது அருந்துவோரின் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் அப்பகுதி மாறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இறைச்சிக் கழிவுகளைக் கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.