திருப்பூர் மாவட்டத்தில் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் நிற்கும் குமரிக்கல்லை சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாரம்பரிய புராதானச் சின்னங்களை அழிக்கும் மின்சாரத் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னம் தான் இந்த குமரிக்கல். தரைக்குக் கீழே 15 அடியில் தொடங்கி தரைக்கு மேலே 32 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த நடுகல்லை சுற்றியிருக்கும் கிராமங்களில் பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, இரும்புக் கசடுகள், தர்மச்சக்கரக்கல் என ஏராளமான பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சிறப்புமிக்க இந்த இடத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட உயர்மின் கோபுர துணை மின் நிலையத்திட்டம் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கைவிடப்பட்டது.
தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டிய குறிப்பிட இடங்களில் பிரதானமானதாகக் கூறப்படும் குமரிக்கல்லில் தொல்லியல் ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆச்சரியங்களைக் கொண்டிருக்கும் குமரிக்கல் சுற்றுவட்டார மக்கள் வணங்கிப் பூஜிக்கும் தெய்வமாகவும் திகழ்கிறது.
ஆண்டுகள் பல ஆயிரம் கடந்தும் தமிழர்களின் வீரவரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் இந்த குமரிக்கல்லின் சிறப்புகளை உலகமே அறியும் வகையில் அப்பகுதியைச் சுற்றுத்தளமாக மாற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாரம்பரியச் சின்னங்களை அழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மின்சார துணைமின் நிலையத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடுவதோடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பொக்கிசங்களைப் பழமை மாறாமல் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல குமரிக்கல்லையும் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.