பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.
இதனிடையே, 2015ம் ஆண்டு மத்திய திட்டக்குழு மாற்றப்பட்டு, நிதி ஆயோக் அமைப்பாக உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்த சூழலில், நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.